தினமணி 20.02.2010
சாலைகளில் கொடிக் கம்பம், தோரண வாயில் அமைக்க மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு: ஆணையர்
திருச்சி, பிப். 19: திருச்சி மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள முக்கியச் சாலைகளின் ஓரங்களில் கொடிக் கம்பங்கள், தோரண வாயில்கள் அமைக்க மாநகராட்சி மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக ஆணையர் த.தி. பால்சாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தார்ச் சாலைகள், சிமென்ட் கான்கிரீட் தளங்கள் மற்றும் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகளுக்காக சாலை ஓரங்களில் கொடிக் கம்பங்கள், அலங்கார வளைவுகள் அமைப்பதற்கு மாநகராட்சியின் அனுமதி பெறாமல், தன்னிச்சையாக குழி தோண்டுவதால் சாலைகள் பழுதடைந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்கவும், சாலைகளின் ஆயுள்காலத்தை நீட்டிக்கவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் சாலைகளின் ஓரங்களில் கொடிக் கம்பங்கள், தோரண வாயில்கள் அமைக்க நிரந்தரமாக இரும்புக் குழாய்கள் பதித்து அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
இந்த வசதியை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், மாநகராட்சி நிர்ணயம் செய்யும் தொகையைச் செலுத்தி உரிய முன்அனுமதியுடன் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.