தினமலர் 20.01.2010
சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்து மாநகராட்சி மூலம் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு
திருநெல்வேலி:சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாநகராட்சி மூலம் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பிராணிகள் வதை தடுப்பு சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார்.
போக்குவரத்துக்கு இடையறாக சாலைகளில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடக்கிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு இனி வரும் காலங்களில் கால்நடை உரிமையாளர்கள் தங்கள் தொழுவங்களில் வைத்து கால்நடைகளை வளர்க்க வேண்டும். இதனை மீறி சாலைகளில் திரியும் கால்நடைகளை மாநகராட்சி மூலம் கைப்பற்றி காப்பகங்களில் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த கால்நடைகளுக்கு அபராத தொகையும், பராமரிப்பு தொகையும் உரிமையாளர் களிடமிருந்து வசூலிக்கப்படும். சில நேரங்களில் சாலைகளில் நடமாடும் நாய்கள் விபத்துக்குள்ளாகி அப்புறப்படுத்தாமல் அப்படியே சாலையில் கிடக்கிறது.அப்போது பொது சுகாதாரத்தை பேணும் வகையில் சுத்தம் செய்ய பிராணிகள் வதை தடுப்பு சங்க செயலாளர் செல்போன் 94434 86473, 0462 – 2552102 என்ற எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.
சாலைகளில் நடக்கும் விபத்துக்களை தடுக்க கால்நடை வளர்ப்போர் ஒத்துழைப்பு நல்க கேட்டு கொள்ளப்பட்டது.இதில் டி.ஆர்.ஓ ரமண சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி- பொறுப்பு) திரவியம், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் ராமானுஜம், சங்க செயலாளர், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.