தின மணி 17.02.2013
போடி மயானம் செல்லும் சாலையில், குப்பைக் கழிவுகளை சாலையில் கொட்டுவதால் போக்குவரத்துக்கு இடையூறும், சுகாதாரக் கேடும் ஏற்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
போடி நகராட்சிக்குள்பட்ட மயானம், நகரின் வடகிழக்குப் பகுதியில் முத்துக்கோம்பை செல்லும் பாதையில் அமைந்துள்ளது. மயானத்திற்கு புதூர் வழியாகச் செல்லும் தார்ச்சாலை அருகே, நகராட்சி பழைய குப்பைக் கிடங்கு உள்ளது. தற்போது, நகராட்சி குப்பைக் கிடங்கு சிரைக்காடு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, புதூரிலிருந்து மயானம் செல்லும் தார்ச்சாலையில், பழைய குப்பைக் கிடங்கு அருகே கோழி இறைச்சிக் கழிவு, உணவு விடுதிகளின் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஏராளமாக கொட்டப்பட்டு வருகின்றன.
இந்தச் சாலை ஊருக்கு வெளிப்புறமாக உள்ளதால் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த குப்பைக் கழிவுகள் நீண்டகாலமாகத் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
குப்பைக் கழிவு குவிந்து கிடப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகிறது. தனியார் சிலரும் குப்பைக் கழிவுகளை இப்பகுதியில் கொட்டி வருகின்றனர். நகராட்சி துப்புரவு பிரிவினர் சிலரும், போடி நகர் பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை இப்பகுதியில் கொட்டுவதாகக் கூறப்படுகிறது.
இப்பகுதியில் ஏராளமான பன்றிகளும் சுற்றித் திரிகின்றன. இதனால் துர்நாற்றமும், சுகாதாரக் கேடும், போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, போடி நகராட்சி நிர்வாகம் இச்சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி, யாரும் குப்பைகளை கொட்டவிடாமல் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.