தினகரன் 27.05.2010
சாலையோரத்தில் இருந்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்தபோது கலெக்டர் சண்முகம் பட்டுக்கோட்டை கடைத்தெரு பகுதிகளில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையோரங்களில் நிறைந்து இருந்த விளம்பர போர்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து நிரந்தரமாக நிறுவப்பட்டிருந்த போர்டுகள், காலம் கடந்தும் அகற்றப்படாமல் இருந்த போர்டுகள் என 70க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய போர்டுகளை நகராட்சியினர் அப்புறப்படுத்தி எடுத்துச்சென்றனர். இதில், மணிகூண்டு, அறந்தாங்கி முக்கம், பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த போர்டுகள் அகற்றப்பட்டன.
இந்த விளம்பர போர்டு அகற்றுவதில் கலெக்டரின் உத்தரவை ஏற்று அதிரடியாய் செயல்பட்ட அதிகாரிகளிடம், “”இதுபோன்று எப்போதும் செயல்படுங்கள்,” என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன், பலமுறை ஆர்.டி.ஓ., கூட்டம் போட்டும் இதுவரை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை செயல்படுத்தாதது ஏன் என்பதை கலெக்டர் கேட்டறிய வேண்டும்.
வியாபாரிகள், அனைத்து மோட்டார் சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி பொறுப்பாளர்கள், எம்.எல்.ஏ., நெடுஞ்சாலை துறையினர் என அனைத்து தரப்பினரையும் மாதம் மாதம் கூட்டி பல மணிநேரத்தைவீணாக்கி வரும் ஆர்.டி.ஓ., மெய்யழகனை,அவரது தலைமையில் நடக்கும் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும், என நகரின் அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்