சாலையோரத்தில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்:கீழ்குந்தா பேரூராட்சி எச்சரிக்கை
பொது சுகாதாரத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சாலையோரத்தில் கோழிக் கழிவுகளை கொட்டினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செயல் அலுவலர் ந.மணிகண்டன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கீழ்குந்தா பேரூராட்சிக்குள்பட்ட மேல் பஜார், கீழ்குந்தா சாலை, கீழ் பஜார், மின்வாரிய முகாம் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்களில் அதிகளவில் கோழி இறைச்சிக் கடைகள் உள்ளன.
இந்தக் கடைகளில் சேகரிக்கப்படும் கோழிக் கழிவுகள் சாலையோரத்திலேயே கொட்டப்படுகின்றன.
இதனால் பொது சுகாதாரத்துக்கு பங்கம் ஏற்படுவதுடன், கழிவுகளை உண்ணவரும் காட்டுப்பன்றி, சிறுத்தை, நாய் உள்ளிட்ட விலங்குகளால் பொதுமக்களும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கோழிக்கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் வழிகாட்டுதல்படி, அப்புறப்படுத்த வேண்டும் என பல முறை வலியுறுத்தியும், கோழி இறைச்சிக் கடை உரிமையாளர்கள் அதைக் கடைபிடிக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
இது பேரூராட்சி நிர்வாகத்தை அவமதிக்கும் செயலாகவே கருத வேண்டியுள்ளது.
எனவே, சாலையோரத்தில் கோழிக் கழிவுகளை கொட்டுவதை இறைச்சிக் கடை உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும். இந்த உத்தரவை மீறும் கடைகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களது கடை உரிமமும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.