சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு
சாலையோரங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அவற்றை உடனடியாக அகற்றுமாறு ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.
சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கோடை வெயிலின் அதீத தாக்கத்தின் காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால், மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் வறண்டு விட்டது. இதன் காரணமாக, தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இப் பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்படும் குப்பைகளை வலைகளால் மூடி, தெருக்களில் சிதறாமல் எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.
மாநகராட்சி குப்பை கொட்டும் இடத்தில், குப்பைகள் தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டை தடுக்கும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கையில் மாநகராட்சியினர் ஈடுபடுமாறும், மேற்படி முறைகேட்டில் ஈடுபடும் நபர்களை, காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மாவட்டம் முழுவதும் சாலை ஓரங்களிலும், பிற இடங்களிலும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அவற்றை உடனுக்குடன் அகற்றவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பெ. ரவீந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.சாந்தி, வருவாய்க் கோட்டாட்சியர் எஸ்.ஆறுமுகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் துரைப்பாண்டியன் மற்றும் வருவாய் காவல்துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.