தினமலர் 27.03.2010
சாலை அமைக்கும் பணி நிறுத்திவைப்பு : ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றுவதில் சிக்கல்
கோத்தகிரி:கோத்தகிரி மார்க்கெட் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றுவதில் சிக்கல் நிலவுவதால், சாலை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலேயே சிறப்பு நிலை அந்தஸ்து பெற்றது கோத்தகிரி பேரூராட்சி; 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டது. தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வாகன நெரிசலில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. கோத்தகிரி மார்க்கெட் பகுதிக்கு வாகனங்களில் வருபவர்கள், சாலையோரத்தில் நிறுத்துவதால், நெரிசல் அதிகரிக்கிறது. இதைக் கருதி, கோத்தகிரி மார்க்கெட் சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்து, அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 10 லட்சம் நிதி ஒதுக்கியது.
நிதி மூலம், இப்பகுதியில் இரு தெருவிளக்குகள், சாலையோர நடைபாதை, மழைநீர் பாதாள வடிகால்வாய் அமைக்கப்பட உள்ளது. இதன்படி, மார்க்கெட் சாலையை சமன்படுத்த ஜேசிபி., மூலம் பெயர்த்து எடுக்கப்பட்டது.
மழைநீர் வடிகால்வாயின் மேல் பகுதியில் கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அகற்றவில்லை. இடையூறாக உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என, அதன் உரிமையாளர்களிடம் பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது; தவிர, பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. கடைகளை அகற்ற உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ளாததால், பேரூராட்சியில் அவசரக் கூட்டம் நடந்தது. ‘கடை உரிமையாளர்கள், தாங்களாகவே முன்வந்து கடைகளை அகற்ற வேண்டும்; மழைநீர் வடிகால்வாய் அமைத்தவுடன்,பேரூராட்சி நிர்வாகம் மூலம், தரமான கடை அமைத்து தரப்படும்; அதுவரை, மார்க்கெட் ஜீப் திடலில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து கொள்ளலாம்‘ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
‘கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம், கடைகளை அகற்ற எடுத்து வரும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்’ என, கடை உரிமையாளர், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மார்க்கெட் சாலை சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், மழைநீர் பாதாள வடிகால்வாய் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை நாட்களில், மார்க்கெட் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு, தாழ்வாக உள்ள மார்க்கெட் சாலையில் குவிய வாய்ப்புள்ளது; இதன் மூலம், சுகாதார சீர்கேடு ஏற்படும் என தன்னார்வ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.