சித்திரைத் திருவிழா: கடைகளை ஏலம் விட பேரூராட்சி முடிவு
மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் அமைக்கப்படும் கடைகளுக்கான வாடகையை ஏலம் விட பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மானாமதுரை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் ஜோசப்ராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் காளீஸ்வரி, செயல் அலுவலர் சஞ்சீவி, சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை சுகாதார மேற்பார்வையாளர் பாலு வாசித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
கவுன்சிலர் முனியசாமி: நகரில் நோய் தாக்கிய நாய்கள் அதிகமாக நடமாடுகின்றன. இதனால் மக்கள் ரோட்டில் நடந்து செல்ல அஞ்சும் நிலை உள்ளது. நாய்களை ஒழிக்க வேண்டும். நகர் பகுதியில் வைகையாற்றில் பெண்கள் பெட்டிகளிலும் தள்ளுவண்டிகளிலும் மணல் அள்ளிச் செல்வதை தடை செய்ய வேண்டும். திருவிழா கடைகளுக்கு ஏலம் நடத்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
கவுன்சிலர் மோகன்தாஸ்: பேரூராட்சி எல்கையை அனைத்து பகுதிகளிலும் வறையரை செய்ய வேண்டும் என்றார்.
மேலும் பல கவுன்சிலர்கள் பேசும்போது மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும், தங்கள் வார்டு குறைகள் குறித்தும் பேசினர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு தலைவர் ஜோசப்ராஜன், செயல் அலுவலர் சஞ்சீவி பதிலளித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.