தினமணி 4.11.2009
சின்னசாமிநகரில் உடனடியாக மழைநீர் வடிகாலை அமைக்க உத்தரவு
திருச்சி, நவ. 3: திருச்சி தென்னூர் சின்னசாமி நகரில் உடனடியாக மழைநீர் வடிகால் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு.
கோ.அபிஷேகபுரம் கோட்டம், 49 – வது வார்டு பகுதியில் உள்ள அண்டகொண்டான் அருகே சின்னசாமிநகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள குறுகிய தெருவில் மழைநீர் தேங்கியுள்ளதை போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு, அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
மேலும், சின்னசாமிநகரில் உள்ள தெருக்களில் மழைநீர் வடிய ஏதுவாக இரண்டு அடி சாலையை உயர்த்தி, கான்கிரீட் சாலை அமைத்து சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் ஏற்படுத்தி, மழைநீர் சீராக வடிய நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளர்களுக்கு அமைச்சர் நேரு உத்தரவிட்டார்.
பின்னர், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, ஆண்களுக்கான கழிப்பிடத்துக்கு அருகே பெண்களுக்கு ஒரு கழிப்பிடம் கட்டித் தருமாறும், கனக பள்ளி சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் அமைத்து,சாலையைப் புதுப்பிக்குமாறும், உய்யகொண்டான் கரையோரத்தில் கூடுதலாக 4 குப்பைத் தொட்டிகள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அமைச்சர் நேரு.
ஆய்வின் போது, மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா, துணை மேயர் மு. அன்பழகன், ஆணையர் த.தி. பால்சாமி, செயற்பொறியாளர் எஸ். அருணாச்சலம், உதவிச் செயற்பொறியாளர் எஸ். நாகேஷ், மாநகராட்சி உறுப்பினர்கள் சையது இப்ராஹிம், மு. அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.