தினகரன் 31.08.2010
சிறுவர்கள் தப்பிய விவகாரம் மாநகராட்சி ஆணையர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக. 31: புரசைவாக்கம் கெல்லீஸில் சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. இதில் இருந்த 18 சிறுவர்கள் பாதுகாப்பு கம்பியை வளைத்து, வெளியேறி, சுற்றுச்சுவரில் ஏறி குதித்து தப்பினர். இந்த செய்தி பத்திரிகைகளில் நேற்று வெளியானது.
இந்த பத்திரிகை செய்தியையே தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் பொதுநல வழக்காக எடுத்து நேற்று விசாரித்தனர்.
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன் ஆஜராகி, வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும். சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியின் சுற்றுச்சுவரில் ஏறி, ஓரமாக குவித்து வைத்திருந்த வீடு கட்டுமான பொருட்கள் மீது குதித்து தப்பிவிட்டனர் என்று தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், “பத்திரிகை செய்தியை பார்க்கும்போது, கெல்லீஸ் சீர்திருத்த பள்ளியில் 53 சிறுவர்கள் உள்ளனர். இவர்களுக்கு போதிய அடிப்படை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை நீதிமன்றம் கடுமையாக கருதுகிறது. எனவே, எதிர்காலத்தில் சிறுவர் சீர்திருத்த பள்ளியை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு பதில் அளிக்க வேண்டும். கட்டுமானப் பொருட்களை சுவர் ஓரம் கொட்ட எப்படி மாநகராட்சி அனுமதித்தது என்று, வரும் 8ம் தேதி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.