தினமணி 03.08.2010
சிவகாசியில் தாய்ப்பால் வார விழா
சிவகாசி, ஆக. 2: சிவகாசி நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் திங்கள்கிழமை தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. நகராட்சி அய்யநாடார் ஜானகி அம்மாள் தாய் சேய் நல விடுதி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். டாக்டர் சரவணவள்ளி வரவேற்றார்.
இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கழக விருதுநகர் மாவட்டச் செயலாளர் டாக்டர் வெ.க.கதிரவன் பேசியதாவது:
சளி, இருமல், வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பொதுவான நோய்களிலிருந்து தாய்ப்பால் குழந்தைகளைப் பாதுகாக்கிறது. குழந்தை பிறந்து 30நிமிடத்தில் தாய்ப் பால் புகட்ட வேண்டும். தாய்க்கு முதல் 3 நாள்களில் சுரக்கும் சீம்பாலை கண்டிப்பாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும். அது குழந்தையின் முதல் தடுப்பூசியாகும்.
குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பின்னர் இணை உணவினைக் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருக்கும்போது தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.
தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கிறதா என்பதை குழந்தையின் சரியான உடல் வளர்ச்சியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் அறிவுத்திறன் அதிகரிப்பதற்கும் தாய்ப்பால் உதவுகிறது என்றார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து டாக்டர் வெங்கடசுப்பிரமணியன் பேசினார்..