தினமணி 18.09.2009
சுகாதாரக் கேடு: உணவு விடுதிகளுக்கு எச்சரிக்கை
புதுக்கோட்டை, செப். 17: புதுக்கோட்டை நகரில் பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படும் உணவு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“”புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கோப்பைகள் போன்றவற்றைப் பயன்படுத்திவிட்டு கண்ட இடங்களில் போடக்கூடாது.
கடை உரிமையாளர்கள் தங்கள் கடையின் முன் கூடை வைத்து அதில் மட்டுமே கழிவுகளைச் சேகரிக்க வேண்டும். அவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகள் நகராட்சிப் பணியாளர்கள் மூலம் தினமும் அப்புறப்படுத்தப்படும்.
இந்நிலையில், இதை மீறி பொது சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் வகையில் குப்பைகளை சாலைகளிலோ கழிவுநீர் கால்வாய்களிலோ போடுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் அபராதம் விதிப்பதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளும்.”