திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இரண்டு கடைகளில், ஆட்டிறைச்சியோடு, மாட்டிறைச்சி கலந்து விற்பனை செய்யப்பட்டது. மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்து, 80 கிலோ இறைச்சியை பறிமுதல் செய் தனர். அக்கடைக்கு வழங்கப்பட்ட லைசன்ஸை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட் டுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி, 37வது வார்டு செட்டிபாளையத்தில் இறைச்சி கடைகள் உள்ளன. அங்குள்ள இரு கடைகளில், ஆட்டிறைச்சியுடன் மாட்டிறைச்சி கலந்து விற்பனை செய்வதாக, நகர்நல அலுவலர் செல்வக்குமாருக்கு தகவல் வந்தது. சுகாதார ஆய்வாளர் முரளி கண்ணன் மற்றும் பணியாளர்கள், செட்டிபாளையத்தில் உள்ள இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அக்கடைகளில் ஆட்டிறைச்சியுடன் மாட்டிறைச்சியை கலந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடைகளில் இருந்த 80 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளில், இறைச்சி வாங்க நின்று கொண்டிருந்த பொதுமக்கள், அதை பார்த்து, கடை உரிமையாளர்களை திட்டித்தீர்த்தனர்.
மாநகராட்சி நகர்நல அலுவலர் செல்வக்குமார் கூறியதாவது:
செட்டிபாளையத்தில், ஆட்டிறைச்சியுடன் மாட்டு இறைச்சி கலந்து விற்பனை செய்வதாக புகார் வந்தது. திடீர் சோதனை செய்தபோது, வேல்முருகன், ராஜா முகமது ஆகிய இருவர் கடைகளில், வெளியே ஆட்டு இறைச்சியும், உள்ளே சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டு இறைச்சிகளும் இருந்தன. இறைச்சி கேட்கும் மக்களுக்கு இரண்டையும் கலந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வேல்முருகன் லைசென்ஸ் பெற்றும், ராஜா முகமது லைசென்ஸ் பெறாமலும் கடை நடத்தியதும் தெரியவந்தது. உணவு கலப்பட தடுப்பு பிரிவில், லைசென்ஸை ரத்து செய்யப்படும்; இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இரு கடைகளிலும் விற்பனைக்கு வைத்திருந்த 80 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து, பெனாயில் ஊற்றி, பாறைக்குழியில் புதைக்கப்பட்டது.
ஆட்டிறைச்சியுடன், மாட்டு இறைச்சியை கலந்து விற்பனை செய்வதாக, மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. பொதுமக்கள், கடைகளில் இறைச்சி வாங்கும்போது, கவனமாக இருக்க வேண்டும். இறைச்சியில் கலப்படம் செய்வதாக சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இச்சோதனை நகர் முழுவதும் உள்ள இறைச்சி கடைகளில் தொடர்ந்து செய்யப்படும், என்றார்.