தினமலர் 09.03.2010
சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி பறிமுதல்
திருவாரூர், : திருவாரூரில் சுகாதாரமற்ற 20 கிலோ ஆட்டு இறைச்சியை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.கலெக்டர் சந்திரசேகர் உத்தரவின்படி திருவாரூர் பகுதியில் உள்ள ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிக் கடைகள் தரமாக செயல்படுகிறதா என்று அவ்வப்போது நகராட்சி சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகளை கால்நடை உதவி டாக்டர் பரிசோதனை செய்து அனுமதித்த பின்னரே திருவாரூர் உழவர் சந்தைக்கு பின்புறம் உள்ள நகராட்சி ஆடு அறுக்கும் கூடத்தில் மட்டுமே வெட்டப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் நகராட்சி ஆணையர் சரவணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவரது தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, பாலமுருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது திருவாரூர் அண்ணா சதுக்கம் பகுதியில் உள்ள ஒரு ஆட்டிறைச்சி கடையில் நகராட்சி ஆட்டிறைச்சி கூடத்தில் வெட்டப்படாத முத்திரை (சீல்) இல்லாத நோய்வாய்ப்பட்டு இறந்த 20 கிலோ அளவுள்ள இறைச்சியை விற்பனைக்காக ஒரு ஐஸ் பெட்டியில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை சுகாதார அதிகாரிகள் பறிமுதல் செய்து கால்நடைத்துறை உதவி இயக்குனர் பழனியப்பன் ஆலோசனையின் பேரில் அழித்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.5 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து ஆணையாளர் சரவணன் கூறுகையில், முறையான பரிசோதனையினறி வெட்டப்படும் ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்படுவதோடு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் நோய்வாய்ப்பட்ட மற்றும் நகராட்சி சீல் இல்லாத இறைச்சியை பதப்படுத்தவோ, சேமித்து வைக்கவோ ஐஸ் கம்பெனிகள் ஏதேனும் உதவி செய்வதாக தெரியவந்தால் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.