சுகாதார சீர்கேட்டை தடுக்க பொது இடத்தில் இறைச்சிக்கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
பொது இடத்தில் இறைச்சிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அனுமதி பெறாத இறைச்சிக்கடைகளில் சோதனை நடத்தப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்துள்ளார்.
இறைச்சிக்கழிவுகள்
கோவை மாநகராட்சி பகுதியில் உரிமம் பெற்ற இறைச்சிக்கடைகளை விட உரிமம் பெறாத இறைச்சிக்கடைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தற்காலிக இறைச்சிக்கடைகளும் நகரம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த கடைகளின் இறைச்சிக்கழிவுகளை சாக்கடை கால்வாய்கள், குளக்கரைகள் மற்றும் பொது இடங்களில் கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. இறைச்சிக்கழிவுகளை தின்னும் தெருநாய்களும் வெறிநாய்களாக மாறி பொதுமக்களை துரத்தி, துரத்தி கடித்து வருகின்றன.
இந்த பிரச்சினை குறித்து மாநகராட்சி கமிஷனர் லதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கடும் நடவடிக்கை
கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 100 வார்டுகளில் மாநகராட்சி அனுமதி பெறாமல் கோழி மற்றும் மாட்டு இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன. இவைகளில் இருந்து இறைச்சிக்கழிவுகள் பொது இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் துர்நாற்றம் மற்றும் சுகாதார கேடுகள் ஏற்படுகிறது. அனுமதி இல்லாமலும் மற்றும் மாநகராட்சி உரிமம் பெறாமலும் செயல்படும் இறைச்சி கடைகள் மீது மாநகராட்சி அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு இறைச்சிகள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும். இந்த உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் மீது மாநகராட்சியால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்துள்ளார்.
வருகிற ஞாயிற்றுகிழமை முதல் அனுமதி பெறாத இறைச்சிக்கடைகள் மீது சோதனையை தீவிரப்படுத்த மாநகராட்சி சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.