தினமலர் 30.04.2010
சுகாதார பணியாளருக்கு மறு தேதி குறிப்பிடாமல் நேர்காணல் ஒத்திவைப்பு
தம்மம்பட்டி: தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்தில் நேற்று நடக்க இருந்த சுகாதார பணியாளருக்கான நேர்காணல், மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்தில் 18 வார்டுகளில் 24 சுகாதார பணியாளர்கள் உள்ளனர். நான்கு பேர் ஓய்வு பெற்றனர். காலியாக இருந்த பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாக டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் அறிவித்தனர்.நேர்காணல் நேற்று டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் காலை 11 மணியளவில் நடப்பதாகவும் தெரிவித்து தபால் அனுப்பினர். நேர்காணலுக்கு பத்துக்கும் மேற்பட்டோர் சான்றிதழ்களுடன் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று காலை காத்திருந்தனர்.காலை 11 மணிக்கு துவங்க வேண்டிய நேர்காணல் 12.30 வரை துவங்கப்படவில்லை. 12.35 மணிக்கு டவுன் பஞ்சாயத்து அலுவலர்கள் நேர்காணலுக்கு வந்தவர்களை அழைத்துவேறொரு நாளில் நேர்காணல் நடத்தப்படும் என்று தெரிவித்து திருப்பி அனுப்பினர். மதியம் 12.55 மணியளவில் டவுன் பஞ்சாயத்து தகவல் பலகையில், நேர்முக தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது. பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டது.டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் அன்பளிப்பு பெற்றுக்கொண்டு முன்கூட்டியே தேர்வு செய்த பெண் ஒருவருக்கு பணியிடத்தை வழங்க உள்ளதாகவும், நேர்காணலை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு சிலர் புகார் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.