தினமலர் 22.01.2010
சுகாதார பாதிப்பை தவிர்க்க கழிவுநீர் கால்வாய் தேவை
செங்குன்றம்: சென்னை மாநகராட்சியின் 62வது வார்டில் அமைந்துள்ள கொளத்தூர் கணேஷ் நகர், வீனஸ் நகர், துறைமுக குடியிருப்பு உள்ளிட்ட பல நகர் பகுதிகள் உள்ளன. அவற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகர் பகுதிகளுக்கு, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் சுகாதார சீர்கேடும், சாலைகள் சேதமடைந்து மரணப் பள்ளங்களும் உருவாகி உள்ளன. இரவு நேரங்களில் அச்சாலைகளை கடப்பவர்கள், விபத்தில் சிக்கி பாதிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி குடியிருப்புகளைச் சேர்ந்த ஜி.ஜே.வி., பொதுநலச் சங்கத்தினர், மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கண்ட பிரச்னையை தீர்க்கும் வகையில், கழிவு நீர் வடிகால்வாய் அமைக்க திட்டம் தயாராக உள்ளது. ஆனால் இப்பகுதியில் “பம்பிங் ஸ்டேஷன்‘ அமைக்க போதிய இடம் கிடைக்கவில்லை. இடம் ஒதுக்கப்பட்டால், அதற்கான பணி துவங்கிவிடும் என்று, கடந்த ஆண்டு இறுதியில் கழிவு நீர் அகற்று வாரியம் உறுதி அளித்துள்ளது. மேற்கண்ட நகர் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்கள், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை கண்டறிந்து, “பம்பிங் ஸ்டேஷன்‘ அமைத்து, கழிவு நீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று, ஜி.ஜே.வி., பொதுநலச் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.