சுகாதார வளாகங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா
விருதுநகர் நகராட்சியில் சுகாதார வளாகங்களின் மராமத்துப் பணிகள் முடிவடைந்த நிலையிலும், இன்னும் செயல்படுத்தப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் நகராட்சியைத் தூய்மைப்படுத்தும் வகையில் பாதாளச் சாக்கடை திட்டம் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் உயர்த்திக் கட்டும் பணி உள்ளிட்டவைகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், சாலையோரங்களில் பொதுமக்கள் இயற்கை உபாதைகளைக் கழித்து சுகாதாரச் சீர்கேட்டை விளைவிப்பதைத் தடுக்க தனிநபர் கழிப்பறைத் திட்டம் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் உள்ள சுகாதார வளாகங்கள் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் தண்ணீர் வசதியின்றியும், செப்டிக் டேங்க் வசதியின்றியும் இருந்தன. இவற்றைச் சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில் பாத்திமா நகர், அல்லம்பட்டி, புதுப்பேருந்து நிலையச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 21 சுகாதார வளாகங்களை நகர்ப்புற மேம்பாட்டு நிதி மூலம் சீரமைப்பதற்கு, ஒவ்வொன்றுக்கும் சேதத்தின் தன்மைக்கேற்ப நிதி ஒதுக்கீடு ரூ. 1.25 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகள் அனைத்தும் நடந்து முடிந்தும், இதுவரையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக விருதுநகர் நகராட்சி தலைவர் மா. சாந்தி கூறுகையில், நகராட்சிப் பகுதியில் சேதமடைந்த சுகாதார வளாகங்களில் மராமத்துப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. ஆனால், இந்த வளாகங்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் மோட்டார் ஆகியவை பொறுத்தும் பணியும், பாதாளச் சாக்கடை இணைப்புப் பணி ஆகியவை முடியாமல் இருக்கின்றன். இப்பணிகள் முடிந்தும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.