தினமணி 16.08.2010
சுதந்திரதின விழா: மாநகராட்சி அலுவலகத்தில் கொடியேற்றினார் மேயர்
திருச்சி, ஆக. 15: இந்திய விடுதலைத் திருநாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றினார் மேயர் எஸ். சுஜாதா.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர்களின் குழந்தைகளில் எஸ்எஸ்எல்சி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 மாணவிகளுக்கும், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவிக்கும், அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்று எஸ்எஸ்எல்சி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 6 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும், தங்க நாணயங்களும் அளிக்கப்பட்டன.
மேலும், 25 ஆண்டுகள் மாசற்ற பணியாற்றிய மாநகராட்சிப் பணியாளர்களின் பணியைப் பாராட்டி நற்சான்றிதழ்களும், ரூ. 500 மதிப்புள்ள கிசான் விகாஸ் பத்திரங்களும் 8 பேருக்கு அளிக்கப்பட்டன. 20 ஆண்டுகள் விபத்தில்லா முறையில் பணியாற்றிய ஓட்டுநருக்கு 4 கிராம் தங்க நாணயமும், பாராட்டுச் சான்றிதழ்களும், பொது சுகாதாரப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 4 பேருக்கு சான்றிதழ்களும் அளிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், ஆணையர் த.தி. பால்சாமி, துணை மேயர் மு. அன்பழகன், செயற்பொறியாளர் ஆர். சந்திரன், கோட்டத் தலைவர்கள் ஜி. ஜெரோம் ஆரோக்கியராஜ், த. குமரேசன், நகர்நல அலுவலர் டாக்டர் கே.சி. சேரன், மாமன்ற உறுப்பினர்கள் அ. ஜோசப் ஜெரால்டு, து. தங்கராஜ், கோ. கண்ணன், ரெ. ஸ்ரீராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது வரவேற்றார். மக்கள் தொடர்பு அலுவலர் க. முத்துசாமி நன்றி கூறினார்.