தினமலர் 05.05.2010
சுத்தமானது மருதமலை அடிவாரம் செம்மொழி மாநாட்டு பணியில் ‘ராக்‘
பேரூர் : மருதமலை அடிவார பகுதியைச் சுற்றியுள்ள குப்பைகளை, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் தன்னார்வ அமைப்பு குழுவினர் நேற்று அகற்றினர்.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் மாதம் நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு வருவோர் மருதமலைக்கு வர விரும்புவர். மருதமலை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருக்கவும் வேண்டும் என கோயம்புத்தூர் குடியிருப்போர் விழிப்புணர்வு அமைப்பு (ராக்) விரும்பியது. இதையடுத்து, மருதமலை அடிவாரத்தில் தூய்மைப்பணி செய்ய விரும்பியது.
மருதமலை அடிவாரத்தில் நேற்று வடவள்ளி பேரூராட்சி, சோமையம்பாளையம் ஊராட்சி, ராக் அமைப்பு, நேசம் அமைப்பு, ஐடிசி, நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் ஆகியன சார்பில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. இதில், பஸ் டெப்போ, கோவில் படிக்கட்டு, பஸ் ஸ்டாப் பகுதி, ஓட்டல் மற்றும் சிறு, சிறு வியாபாரிகள் கடைகளிலிருந்து பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்தனர். மக்கும்குப்பை, மக்காத குப்பைகளை சேகரிக்க பிளாஸ்டிக்கூடை, சாக்குகள் வழங்கப்பட்டன. இதில், ராக் நிர்வாகி ரவீந்திரன், வடவள்ளி பேரூராட்சி தலைவர் அமிர்தவல்லி, சோமையம்பாளையம் ஊராட்சி தலைவர் ராமலிங்கம், நேசம் அமைப்பு தலைவர் சண்முகசுந்தரம், பேரூராட்சி துணை தலைவர் சிவசாமி உள்பட பலர் பங்கேற்றனர். குப்பைகளை அகற்றும் பணியில், கிருஷ்ணா கல்லூரி, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி, அமிர்தா, என்.ஜி.பி., கல்லூரிகளைச் சேர்ந்த 250க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் இப்பணியில் ஈடுபட்டனர்.