தினகரன் 02.12.2010
சுத்தமில்லாத ஓட்டலுக்கு பூட்டு
பெங்களூர், டிச. 2: மாநகரில் சுத்தமான இறைச்சி கூடம் இல்லாத, பிரியாணி ஓட்டல்களுக்கு சீல் வைக்கும்படி அதிகாரிகளுக்கு மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் உத்தரவிட்டார்.
பெங்களூர் வடக்கு மண்டலத்தில் இயங்கி வரும் கடைகளில் நிலைக்குழு தலைவர் மஞ்சுநாத்ரெட்டி நேற்று அதிகாரிகளுடன் சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது எம்.வி. கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனை கடைக்கு சென்று பார்வையிட்டார். அங்கு சுத்தமில்லாமல் ஆங்காங்கே காணப்பட்ட கழிவுகளை பார்த்து கேள்வி எழுப்பினார். பின் இறைச்சி விற்பனை செய்ய அனுமதி பெற்றுள்ள சான்றிதழ் காட்டும்படி கேட்டார். அவரிடம் சான்றிதழ் இல்லாததால், உடனடியாக கடைக்கும் சீல் வைக்கும் படி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து ஐதராபாத் பிரயாணி ஓட்டலுக்கு சென்ற ரெட்டி, நேரடியாக சமையல் செய்யும் அறைக்கு சென்றார். அங்கு கோழி இறைச்சி சிதறி கிடந்தது. சமையல் செய்யும் இடம், பாத்திரம் அனைத்தும் பாசி பிடித்து பார்க்க சகிக்காமல் இருந்தது. இப்படி சுத்தமில்லாமல் சமையல் செய்தால், சாப்பிடும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதா என்று கேள்வி எழுப்பினார். ஓட்டல் நடத்துனரும் அனுமதி பெறாமல் இருந்ததால், ஓட்டலை மூடும் படி உத்தரவிட்டார். பின் வட மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ரெட்டி, ஒவ்வொரு கடையாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.