தினமலர் 27.08.2010
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை: ஓசூர் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு
ஓசூர்: ஓசூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிப்பு இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓசூர் அரசு மருத்துவமனையில் தினம் 2,000 பேர் உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனையில் கடந்த காலத்தில் போதிய டாக்டர்கள், மருத்துவ சிகிச்சை கருவிகள் மற்றம் கட்டிட வசதியில்லாமல் நோயாளிகள் முழுமையான சிகிச்சை பெற முடியாமல் அவதியடைந்து வந்தனர். தற்போது, தமிழ்நாடு அரசு சுகாதார திட்டத்தில் மருத்துவமனைக்கு போதிய டாக்டர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, கட்டிடங்கள், புதிய அறுவை சிகிச்சை கருவிகள், ஜெனரேட்டர் மற்றும் நோயாளிகள் துணிகளை சலவை செய்ய வாஷிங் மிஷின் என மாவட்ட மருத்துவமனைக்கு தகுந்தவாறு நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சில மாதமாக மருத்துவமனையில் பொதுப்பணித்துறை மூலம் போடப்பட்ட போர்கள் வறண்டு தண்ணீர் இல்லாமல் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். இது குறித்து, “காலைக்கதிர்‘ நாளிதழிலில் செய்தி வெளியானது. தகவல் அறிந்த கலெக்டர் அருண்ராய் அதிகாரிகளுடன் மருத்துவமனையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
நகராட்சி கமிஷனர் பன்னீர் செல்வம் மற்றும் அதிகாரிகளை அழைத்து, மருத்துவமனைக்கு நிரந்தரமாõ தண்ணீர் கிடைக்கும் வகையில் புதிய போர் போட கலெக்டர் உத்தரவிட்டார். தற்போது, நகராட்சி நிர்வாகம் மருத்துவமனையில் போர் போடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அது வரை நகராட்சி மூலம் லாரிகளில் மருத்துவமனைக்கு தேவையான அளவு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் நோயாளிகள் சுகாதாரமான குடிநீர் குடிக்கும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய போர் போடப்பட்டதும், நவீன சுத்திகரிப்பு எந்திரம் பொறுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பொன்ராஜ் கூறியதாவது: ஓசூர் அரசு மருத்துவமனைக்கு தேசிய என்.ஏ.பி.ஹெச்., தர அங்கீகாரம் கிடைப்பதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சுகாதார துறை மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக தற்போது நவீன குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு எந்திரம் மூலம் மணிக்கு 500 லிட்டர் சுகாதாரமான குடிநீர் பெறலாம். இதன் மூலம் நோயாளிகள் உடல் நலம் பாதுகாக்கப்படுவதோடு குடிநீர் மூலம் பரவும் தொற்று நோய்களை முற்றிலும் தடுக்கலாம். விரைவில் போர் போட்டு நவீன சுந்திகரிப்பு எந்திரம் பொருத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.