தினமணி 19.11.2009
சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத சாயப்பட்டறைகளுக்கு சீல்
ஈரோடு, நவ. 18: ஈரோட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத 7 சாயப்பட்டறைகளுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான சாயப்பட்டறைகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால் தண்ணீர் மாசடைந்து விளைநிலங்கள் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன என்று புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத சாயப்பட்டறைகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி வருவாய் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சாயப்பட்டறைகளில் சோதனை நடத்தி, சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியர் பி.பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள், ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளில் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத 7 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது .
“தொடர்ந்து சாயப்பட்டறைகளில் சோதனை நடத்தப்படும். சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்படும்‘ என்று வருவாய்க் கோட்டாட்சியர் பெஞ்சமின் தெரிவித்தார் .