தினமலர் 17.05.2010
சுற்றுச்சூழலை பாதிக்காத நவீன எரிவாயு தகன மேடை
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை நேதாஜி ரோடு சுடுகாட்டில் நகராட்சி சார்பில் 52 லட்ச ரூபாயில், சுற்றுச்சூழலை பாதிக்காத நவீன எரிவாயு தகன மேடை கட்டப்பட்டு உள்ளது.
இதில், 15 முதல் 20 சத ஈரப்பதமான விறகுகளை சிறு சிறு துண்டுகளாக்கி அவற்றை ஒரு சேம்பரில் போட்டு எரிய வைக்கின்றனர். அதிலிருந்து கார்பன்–டை–ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் உட்பட பலவித வாயுக்கள் வந்து, வேதிமாற்றம் ஆகி, எரி வாயுவாக வருகிறது. இந்த வாயுவை தண்ணீரில் வடிகட்டி, சுத்தமான வாயுவாக மாற்றி, பிணம் எரிக்கும் தகன அறைக்குள் குழாய் கள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த அறையை சுற்றியுள்ள ஒன்பது ‘பர்னர்கள்‘ மூலம், 650 டிகிரி பாரன்ஹீட்டில் பிணம் ஒரு மணி நேரத்தில் எரிந்து சாம்பல் ஆகிறது. பிணம் எரியும் போது ஏற்படும் வாயு மற்றும் கழிவுகள் மற்றொரு குழாய் மூலம் வெளியேறி, சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. மீதமுள்ள வாயு, 100 அடி உயரமுள்ள ‘சிம்னி‘ வழியாக எந்தவித நாற்றம் இல்லாமல் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இங்கு இறுதிச்சடங்கு செய்ய அறை உள்ளது. ஆண், பெண்களுக்கென தனித்தனி குளியல் அறைகள், மற்றும் தியான மண்டபம், பூங்கா அமைக்கப்பட உள்ளன.