தினமலர் 09.11.2010
சென்னையின் முக்கிய சாலைகளில் டிஜிட்டல் விளம்பரங்கள் அகற்றும் பணி
சென்னை: சென்னை நகரில் 248 இடங்களில், உயர்ந்த கட்டட சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த டிஜிட்டல் விளம்பரங்கள் அகற்றும் பணி, மேயர் முன்னிலையில் நேற்று துவங்கியது.
சென்னையில், நகரை அழகுபடுத்தும் நோக்கோடு, முக்கிய சாலைகளிலும், அரசு கட்டடங்களிலும் விளம்பரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செய்யப்பட்டிருந்த விளம்பரங்கள், கடந்த 7ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என, மேயர் சுப்ரமணியன் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், விளம்பரங்கள் அகற்றப் படவில்லை. இதை தொடர்ந்து, மேயர் முன்னிலையில், விளம்பரங்கள் அகற்றும் பணி நேற்று துவங்கியது. முதலில், கிண்டி ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள உயர்ந்த கட்டடங்களில், சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த மொபைல் போன் நிறுவன விளம்பரங்களை தார் பூசி அழிக்கும் பணி நடந்தது.
அப்போது மேயர் சுப்ரமணியன் கூறியதாவது: சென்னையை அழகுபடுத்தும் விதத்தில், மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்ணா சாலை, காமராஜர் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை ஆகியவற்றில், சுவர் விளம்பரங்கள் எழுதவும், ஒட்டவும் தடை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்கள், பூங்காங்கள் உட்பட 3,464 கட்டடங்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு மாநகராட்சி, பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளால் பராமரிக்கப்படும், 250க்கும் மேற்பட்ட பாலங்கள், சுரங்கப் பாதைகளில் சுவர் விளம்பரங்கள் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. பிரதான சாலைகளில் உள்ள அரசுக்கு சொந்தமான சுவர்களில், வெள்ளையடித்து தமிழர் பண்பாட்டை விளக்கும் ஓவியங் கள் வரையப்படுகிறது. நகரில், விளம்பர பலகைகள் வைக்க, சட்ட ரீதியாக முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், விளம்பரதாரர்கள் புது யுக்தியுடன், பிரதான சாலைகளில் உள்ள, உயர்ந்த கட்டட சுவர்களில், டிஜிட்டல் விளம்பரங் களை ஒட்டி வருகின்றனர்.
நகரின் அழகை கெடுக்கும் வகையில், வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரங்களை 7ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என எச்சரிக்கப்பட்டது. விளம்பரதாரர்கள் அகற்றவில்லை என்பதால், தமிழக திறந்தவெளி இடங்கள் அழகை கெடுக்கும் தடை சட்டம் 1959ன் படி, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விளம்பரங்கள் அழிக்கப்படுகிறது. நகரில், 248 உயர்ந்த கட்டடங்களில் இதுபோன்ற விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவைகள் அகற்றப்படும். தடை சட்டத்தின் படி, கட்டட உரிமையாளரிடம் 1,000 ரூபாய் அபராதம் வசூலிப்பதோடு, விளம்பரத்தை அழிக்க ஆகும் செலவும் வசூலிக்கப்படும்.10 மண்டலங்களிலும், இன்று விளம்பரங்களை அழிக்கும் பணி நடைபெறுகிறது. “ஜல்‘ புயலால், சென்னையில் 7.4 செ.மீ., அளவிற்கு மழை பெய்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில், தேங்கிய மழை நீர் 150க்கும் மேற்பட்ட மோட்டார் பம்ப்கள் மூலம் அகற்றப்பட்டது. 64 மரங்கள் வேரோடு சாய்ந்தன. 70 மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. 12 ஆயிரம் உணவு பொட்டலங்கள் மற்றும் ஏழாயிரம் ரொட்டிகள் வழங்கப்பட்டன. மழையினால், சாலைகளில் விழுந்த மரக்கிளைகள், குப்பைகள் 850 டன் கூடுதலாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு மேயர் கூறினார். உடன், கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் உயரதிகாரிகள் இருந்தனர்.