தினமலர் 23.12.2009
சென்னையில் சுற்றுலா பொருட்காட்சி துவக்கி வைத்து கருணாநிதி பெருமிதம்
சென்னை : “”நான் சென்னைக்கு வந்த காலத்தில் இருந்ததையும், தற்போது வளர்ந்துள்ள சென்னையையும் கண்டு ஆச்சரியப்படுகிறேன். நம் நகரம், நம் தெரு, நம் உடைமை என ஒவ்வொருவரும் நினைத்து மெரீனா கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்,” என முதல்வர் கருணாநிதி பேசினார்.சென்னை தீவுத்திடல் அண்ணா கலையரங்கில், இந்திய சுற்றுலா தொழில் பொருட்காட்சி நேற்று துவங்கியது. சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் தலைமை வகித்தார்.
பொருட்காட்சியை துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:இந்த பொருட்காட்சியில் வைக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த ஓவியங்களை காண்பதற்காக நிச்சயம் மக்கள் அதிகளவில் வருவார்கள். 1971ம் ஆண்டு தான் முதன் முறையாக இந்த சுற்றுலா கண்காட்சியை நான் துவக்கி வைத்தேன்.ஆட்சி மாறினாலும் இந்த பொருட்காட்சி தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர இது போன்ற பொருட்காட்சிகள் உதவுகின்றன. இதிகாசம், இலக்கியம், வரலாறுகள் சுற்றுலாவை வளர்க்கும் வகையிலேயே எழுதப்பட் டுள்ளன.ராமாயணத்தில், அயோத்தியை ராமன் நின்று பார்த்த இடம் குறிப் பிடப்பட்டுள்ளது. அந்த இடம் வேதாரண்யம் அருகே கோடியக் கரையில் இருக்கிறது. அங்குள்ள கல்வெட்டில் “ராமன் இந்த இடத்தில் இங்கு நின்று தான் அயோத்தியை கண்டான்‘ என எழுதப்பட்டுள்ளது.ராமன் அந்த இடத்தில் நின்று அயோத்தியை கண்டானா இல்லையா என்பது நமக்கு தெரியாது. ஆனால், அந்த கல்வெட்டில் உள்ள தகவலை காண மக்கள் கண்டிப்பாக அங்கு சென்று வருவர் என்பது உண்மை.
கோடியக்கரையில் ராமர் பாதம் இருக்கிறது என பொதுமக்கள், ஒருவர் சொல்லி ஒருவர் கேட்டு அந்த இடத்திற்கு சென்று வருவதால் சுற்றுலா வளர்கிறது.சிலப்பதிகாரத்தில் கண்ணகி, பூம்புகாரில் இருந்து கோவலனுடன் புறப்பட்டு மதுரை செல்கிறாள்.அங்கு கள்வன் பட்டம் பெற்ற கோவலன் கொலையுண்டான். கண்ணகி, பாண்டிய மன்னனிடம் வழக்குரைத்ததாக எழுதப்பட் டுள்ளது.கண்ணகி பிறந்து வளர்ந்த பூம்புகாருடன் கதையை முடிக் காமல் மதுரை வரை எழுதப்பட் டுள்ளது.அதனால், பொதுமக்கள் பூம்புகாரை மட்டுமின்றி மதுரை வரை சென்று சுற்றுலாவை வளர்த்துள் ளனர்.சுற்றுலா பெருகினால் தான் உலக மக்கள், நம்நாட்டிற்கு வந்து பொருளாதாரத்தை பெருக்குகின்ற நிலை ஏற்படும்.மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் சுற்றுலா குறைவு என்பதை புள்ளி விவரங் கள் கூறுகின்றன. நான் சென்னைக்கு வந்த காலத்தில் இருந்ததையும், தற்போது வளர்ந் துள்ள சென்னையையும் கண்டு ஆச்சரியப்படுகிறேன்.பதினைந்து மாதங்களுக்கு முன்பு, நகரில் விளம்பர பலகைகள் முளைத் திருந்தன. கட்டடங்களையும், மரங்களையும் மறைத்து இருந்தன. அதை அகற்ற உத்தரவிட்டேன். மீண்டும் விளம்பர பலகைகளை அனுமதிக்கக் கோரி சம்பந்தப் பட்டவர்கள், பத்திரிகைகளில் தொடர்ந்து விளம்பரங்கள் வெளியிட்டு எனக்கு கோரிக்கை வைத் தனர்.
நான் அவற்றை பார்க்காமல் குருடனாக இருந்து விட்டேன். அப்படி இருந்ததால் தான், தற் போதைய சென்னை நகரின் அழகை கண்டு ரசிக்க முடிகிறது. நீங்களும் கண்டு ரசித்துக் கொண் டிருக்கிறீர்கள். சென்னை மாநகராட்சி சென்னையை அழகாக மாற்றிக் கொண்டிருக்கிறது.மெரீனா கடற்கரை, 26 கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தப் பட்டுள்ளது. அதை அழகுபடுத்த முடியாத அளவுக்கு இருந்த குடிசைகள் அகற்றப்பட்டன.அந்த முயற்சிக்கு இடையூறாக இருந்தவர்களை சமாதானப் படுத்தித்தான், இவ்வளவு பெரிய கடற்கரையை அழகாக மாற்றுவதற்கு முடிந்தது.நம் நகரம், நம் தெரு, நம் உடைமை என ஒவ்வொருவரும் நினைத்து மெரீனா கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.தலைமை செயலர் ஸ்ரீபதி, சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன், எம்.பி.,க்கள் கனிமொழி, இளங்கோவன் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், சுற்றுலா பண்பாட்டுத்துறை செயலர் இறையன்பு உட்பட பலர் பங்கேற்றனர்.சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குனர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.