தினமணி 17.04.2010
சென்னையில் புதிதாக விருகம்பாக்கம் மண்டலம் திருப்பூர், சேலம், ஈரோடு அலுவலகங்கள் பிரிப்பு: அமைச்சர் எ.வ.வேலு
சென்னை, ஏப்.16: சென்னையில் புதிதாக விருகம்பாக்கம் மண்டலம் தோற்றுவிக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய ஊர்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்கள் இரண்டாகப் பிரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 16 மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்போது, சென்னை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சட்டப் பேரவை தொகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. சில தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
மேலும், சென்னை புறநகர்ப் பகுதிகளில் ரேஷன் அட்டைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ள விருகம்பாக்கம் தொகுதியின் எல்லைக்குள் வில்லிவாக்கம், தியாகராய நகர், சைதாப்பேட்டை ஆகிய மூன்று மண்டலங்கள் அடங்கியுள்ளன. 40 ரேஷன் கடைகளும், 98,305 அட்டைகளும் உள்ளன.
மேலும், விருகம்பாக்கம் பகுதிக்கு மிக அருகில் உள்ள மதுரவாயல், நொளம்பூர், வானகரம் மற்றும் ஆலப்பாக்கம் பகுதிகளில் 26 கடைகளில் நடைமுறையில் 52,560 ரேஷன் அட்டைகள் உள்ளன.
எனவே, அந்தப் பகுதிகளைச் சேர்த்து 66 ரேஷன் கடைகளுடன் 1 லட்சத்து 50 ஆயிரத்து 865 ரேஷன் அட்டைகளை இணைத்து விருகம்பாக்கம் மண்டலம் புதிதாக தோற்றுவிக்கப்படும்.
மூன்று ஊர்களின் அலுவலகங்கள்: திருப்பூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய ஊர்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்கள் இரண்டாகப் பிரிக்கப்படும். ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகியன மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. எனவே, ரேஷன் அட்டைகளின் அளவும், அட்டைதாரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அவர்களுக்கான பொருள்கள் மற்றும் சேவையை அளிக்க ஒரு வட்ட வழங்கல் அலுவலர் மட்டும் இருந்தால் போதாது.
ஆகவே சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் வட்ட வழங்கல் அலுவலகங்கள் நடப்பு நிதியாண்டில் இரண்டாகப் பிரிக்கப்படும். புதிதாக கூடுதலாக தலா ஒரு வட்ட வழங்கல் அலுவலகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.