மாலை மலர் 24.10.2013

சென்னை, அக். 24: சட்டசபையில் இன்று
கேள்வி நேரத்தின் போது ‘‘தானியங்கி மின் கட்டண வசூல் எந்திரம் அமைப்பது
குறித்து வேளச்சேரி எம்.எல்.ஏ. அசோக் கேட்ட கேள்விக்கு அமைச்சர் நத்தம்
விசுவநாதன் அளித்த பதில் வருமாறு:–
வேளச்சேரி பகுதி திருவான்மியூர்,
வேளச்சேரி துணை மின் நிலையங்களில் தானியங்கி மின் கட்டண வசூல் எந்திரம்
அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த இடங்களில்
இந்த எந்திரங்கள் செயல்பட தொடங்கும். முதல்–அமைச்சரின் ஒப்புதல் படி 100
மையங்களில் இந்த எந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதுவரை 24 இடங்களில்
மின்கட்டண எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 32 ஆயிரம் நுகர்வோர்
பயன்பட்டு வருகிறார்கள். 76 எந்திரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை
தவிர வேலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகரங்களிலும்
இதுபோன்ற எந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர ‘ஆன் லைன்’
மூலமும் வங்கிகள் மூலமும் தபால் அலுவலகங்களிலும், செல்போன் மூலமும்
மின்கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 18 வங்கிகளிடம்
ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் மின்சாரம் நுகர்வோர் 14 சதவீதம்
பேர் பயன்பட்டு வருகிறார்கள். 50 சதவீதம் பேர் பயன்பெற நடவடிக்கை
எடுக்கும்படி முதல்–அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதற்கான ஏற்பாடுகள்
நடந்து வருகிறது. சென்னையில் தில்லைகங்கா நகர், பெசன்ட்நகர் ஆகிய
இடங்களிலும் விரைவில் தானியங்கி வசூல் எந்திரம் செயல்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.