தினமணி 07.11.2009
சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு

கடல்போல் காட்சியளிக்கும் பூண்டி நீர்த்தேக்கம். (உள் படம்) பூண்டியின் நீர்மட்ட அளவு 27.21 அடியாக உள்ள அளவை காட்டும் அளவுகோல்.
சென்னை, நவ. 6: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் தொடர் மழை காரணமாக நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பூண்டி, புழல், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
வெள்ளிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி பூண்டி ஏரியில் மொத்தம் உள்ள 35 அடி உயரத்தில் 27.21 அடி நீர்மட்டம் உள்ளது. 1178 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மேலும் ஆந்திரம் மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் விநாடிக்கு 414 கன அடி நீரும், மழை காரணமாக 112 கன அடி நீர் சேர்த்து 526 கன அடி நீர் வரத்து உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து லிங்க் கால்வாய் வழியாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு 400 கன அடி நீரும், சென்னை குடிநீருக்காக பேபி கால்வாய் மூலம் 35 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரியில் மொத்தம் உள்ள 21.20 உயரத்தில் 9.05 அடி நீர் மட்டம் உள்ளது. இங்கு 1133 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரிக்கு லிங்க் கால்வாய் வழியாக 220 கன அடி நீரும், மழை காரணமாக 81 கன அடி நீரும் சேர்த்து மொத்தம் 301 கன அடி நீர் வரத்து உள்ளது. இங்கிருந்து சென்னை குடி நீருக்கு 140 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் உள்ள 22 அடி உயரத்தில் 10.70 அடி நீர் மட்டம் உள்ளது. இங்கு 843 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு மழை மற்றும் லிங்கால்வாய் மூலமாக 1377 கன அடி நீர் வரத்து உள்ளது. இங்கிருந்து சென்னை குடிநீருக்காக 60 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியில் மொத்தம் உள்ள 17.86 அடி உயரத்தில் 6.14 அடி நீர் மட்டம் உள்ளது. இங்கு 238 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இங்கு லிங்க் கால்வாய் மூலம் 69 கன அடி நீர் வரத்து உள்ளது. இங்கிருந்து நீர் வெளியேற்றம் ஏதும் இல்லை. மேற்கண்ட பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளும் சென்னை குடிநீரின் முக்கிய ஆதாரமாக உள்ளதால் 4 ஏரிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மழை நீடித்தால் வெகு விரைவில் ஏரிகளின் நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.