தினமலர் 24.02.2010
சென்னை நகருக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் : மாமல்லபுரம் அருகே துணை முதல்வர் அடிக்கல்
மாமல்லபுரம் : “”கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்டிருந்தாலும், தி.மு.க., அரசு கிடப்பில் போடாமல் செயல்படுத்துகிறது” என துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னைப் பெருநகர குடிநீர் வாரியம் சார்பில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிராமத் தில் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்திற்கு, நேற்று, அடிக்கல் நாட்டி, துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:சென்னை நகர குடிநீர் திட்டத் திற்காக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்குவதாக, மத்திய அரசு 2004ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தது. அப்போதைய அ.தி.மு.க., அரசு திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்யவில்லை. 2006ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்து, மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பியது.
மத்திய அரசு ஆய்வுசெய்து, பொருளாதார விவகார அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து, 871 கோடியே 24 லட்சம் ரூபாய் மானிய மாக வழங்க ஒப்புதல் அளித்தது. முதல்கட்டமாக, 300 கோடி ரூபாய் வழங்கியது. இத்திட்டத்தை செயல் படுத்த, அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை நிலம் நீண்டகால குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.மாதம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் குத்தகைத் தொகையாக வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதிக்குள் திட்டப்பணிகள் முழுமையாக முடிக்கப்படும்.இத்திட்டத்தால், சென்னை புறநகர் குடிநீர் தேவை பூர்த்தியாகும்.அ.தி.மு.க., ஆட்சியில், 2003ம் ஆண்டு, மீஞ்சூரில் துவக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பல்வேறு பிரச்னை, வழக்குகளால் நிலுவையில் இருந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் வழக்குகளை முடித்து திட்டத்தை தொடங்கினோம். 2008ம் ஆண்டிலேயே முடித்திருக்க வேண்டும்.தொழில்நுட்ப பிரச்சனை, மழை, கடல்சீற்றம் ஆகியவற்றால் முடியவில்லை. தற்போது, 99 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அடுத்த மாதத்திற்குள் முழுமையடையும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.தலைமைச் செயலர் ஸ்ரீபதி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.