தினமணி 19.03.2010
சென்னை நதிகள் சீரமைப்பு: தமிழக–சிங்கப்பூர்அதிகாரிகள் கூவத்தில் இன்று கள ஆய்வு
சென்னை, மார்ச் 18:சென்னை நதிகளை சீரமைக்கும் பணியின் ஒருபகுதியாக, கூவத்தை தமிழக}சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் கூட்டாக வெள்ளிக்கிழமை ஆய்வு செய்கின்றனர்.
கூவம் சீரமைப்புப் பணிகளின் முதல்கட்டமாக, கூவம் ஆறு மற்றும் சென்னையின் பிற நீர்நிலைகளைச் சீரமைக்கும் நோக்கத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் “சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை‘ உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை நீர்நிலைகளின் சீரமைப்புத் திட்டங்களை உருவாக்குதல், ஒருங்கிணைத்தல், நிதி ஆதாரம், மேற்பார்வை ஆகியவற்றுக்காக இந்த அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது. இந்த முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், ஆலோசனைகள் வழங்கவும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் நிலைக்குழு அமைக்கப்பட்டது.
பல்வேறு ஆய்வுகளுக்குப் பின், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூர் அரசின் கீழ் செயல்படும் “சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனம்‘ ஆகியவற்றுக்கு இடையே வியாழக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதற்காக, சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் அல்போன்சஸ் சியா தலைமையிலான குழு சென்னை வந்துள்ளது. முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இதுகுறித்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலர் பணீந்திர ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியது:
கூவம் சீரமைப்புத் தொடர்பாக குடிசை மாற்று வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழக மற்றும் சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூவம் ஓரத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை களஆய்வு மேற்கொள்கின்றனர். இதன் அடிப்படையில், முதல் கட்ட அறிக்கையை அவர்கள் அளிப்பார்கள்.