தினகரன் 07.09.2010
சென்னை புறநகர் பகுதிகளில் கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டம்
தாம்பரம், செப். 7: சென்னை புறநகர் பகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் எல்லையாக உள்ள செம்பாக்கம், மாடம்பாக்கம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், சிட்லபாக்கம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
விரிவான திட்ட அறிக்கையை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் தயாரித்தது. இந்த பணியை மத்திய அரசின் ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பெருங்களத்தூரில் ரூ47.81 கோடி, செம்பாக்கத்தில் ரூ61.82 கோடி, பீர்க்கன்காரணையில் ரூ21.29 கோடி, மாடம்பாக்கத்தில் ரூ54.45 கோடி என பல்வேறு பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற உள்ளன. பணி துவங்க டெண்டர் விடப்பட்டது. விண்ணப்பித்த ஒப்பந்ததாரரின் பணி நிலை, நிதி நிலை, ஏற்கனவே செய்து முடித்த பணிகள் விவரம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தங்களது கனவுத் திட்டம் விரைவில் நிறைவேறப் போவதாக இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பாதாள சாக்கடை அமைக்கப்படும் இடத்தில் புதிதாக சாலையை செப்பனிடக்கூடாது என்று அனைத்து பேரூராட்சிகளுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இந்நிலையில், சாலையை செப்பனிடாமல் விடுவது மற்றும் பாதாள சாக்கடை கட்டுமான வேலைகளால் போக்குவரத்து பாதித்து, மக்கள் அதிருப்தி அடைய வாய்ப்பு இருக்கிறது என்று சிலர் கூறியுள்ளனர். இதை கருத்தில் கொண்டு, பாதாள சாக்கடை பணியை சட்டசபை தேர்தலுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தை தற்போதைக்கு கிடப்பில் போட சென்னை குடிநீர், கழிவுநீர் அகற்றல் வாரியத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பேரூராட் சி களில் சேதமடைந்த சாலைகளை சீர்செய்ய நிதி வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து பேரூராட்சிகளிலும் பழுதடைந்த சாலைகள் கணக்கெடுக்கப்பட்டு பேரூராட்சி மன்ற ஒப்புதல் பெற்று அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.