தினத்தந்தி 02.08.2013
சென்னை மாநகராட்சி இடைநிலை பள்ளிகளில் போலி சான்றிதழ் மூலம் ஆசிரியர்கள் நியமனம்
284 பள்ளிகள்
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் 284 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இதில் 122 தொடக்க பள்ளிகளும், 92 நடுநிலை பள்ளிகளும், 36 உயர்நிலை
பள்ளிகளும், 32 மேல்நிலைப்பள்ளிகளும், 30 மழலையர் பள்ளிகளும் அடங்கும்.
மேலும் ஒரு உருது, தெலுங்கு மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.
மாநகராட்சி பள்ளிகளில் 4 ஆயிரத்து 41 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
122 தொடக்க பள்ளிகளில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை
ஆசிரியர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில
ஆண்டுகளுக்கு முன்பு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக பணி நியமனம்
பெற்றவர்கள்.
திடுக்கிடும் புகார்
இவர்களில் 7 ஆசிரியர்கள் போலி சான்றிதழ் மூலம் ஆசிரியர் பணி பெற்றதாக
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புகார் எழுந்தது. அப்போது சென்னை
மாநகராட்சியின் ஆணையராக இருந்த எம்.பி.விஜயகுமார் சம்பந்தப்பட்ட
ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக முழு
விசாரணை மேற்கொண்டார். பின்னர் திடீரென்று எம்.பி.விஜயகுமார் இட மாற்றம்
செய்யப்பட்டார். பின்னர் போலி சான்றிதழ் விவகாரம் மறைந்தது. இந்தநிலையில்
போலி சான்றிதழ் கொடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட 7 ஆசிரியர்கள், மேலும் பல
ஆசிரியர்கள் போலி சான்றிதழ் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்
பணி பெற்றிருப்பதாக திடுக்கிடும் புகாரை சென்னை மாநகராட்சி
கல்வித்துறைக்கு அளித்தனர்.
100 ஆசிரியர்களுக்கு தொடர்பு?
புகாரின்பேரில் இந்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்த மாநகராட்சி
கல்வித்துறை உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி விஜிலென்ஸ்
அதிகாரி சுப்பாராவ் தலைமையில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 26 இடைநிலை ஆசிரியர்கள் போலி மதிப்பெண்
சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் 100–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதேபோன்று போலி சான்றிதழ் மூலம்
பணியில் சேர்ந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள்
அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்படும்
விசாரணை அறிக்கையை மாநகராட்சி விஜிலென்ஸ் அதிகாரிகள் இன்னும் 2 அல்லது 3
நாட்களுக்குள் சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூரிடம் அளிக்க உள்ளனர்.
அப்போது போலி சான்றிதழ் மூலம் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பணி
நீக்கம் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
மாணவர்கள் அதிர்ச்சி
சென்னை மாநகராட்சி பள்ளிகள் மாணவர்களின் சேர்க்கை விகிதம் பெரும் அளவில்
குறைந்து வரும் நிலையில், போலி சான்றிதழ் மூலம் ஆசிரியர் பணி நியமனம்
நடைபெற்றுள்ளது பள்ளி மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வருடங்களாக அனுமதி பெறாத பேருந்து நிழற்குடைகள் அமைத்து அதன் மூலம் பல கோடி
ரூபாய் மோசடி நடைபெற்ற தகவல் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் போலி சான்றிதழ் மூலம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்
பணி நியமனம் நடைபெற்று இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் சென்னை மாநகராட்சி
வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.