தினமணி 20.09.2010
சென்னை மாநகராட்சி சார்பில் விளையாட்டுப் போட்டிகள்
சென்னை, செப்.20: சென்னை மாநகராட்சி உருவாகி 322 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள், அகில இந்திய மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு செப்டம்பர் 23-ம் தேதி முதல் சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 23.9.2010 முதல் 25.9.2010 வரையிலும் அகில இந்திய மாநகராட்சிகளின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 27.9.2010 முதல் 29.9.2010 வரையிலும் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், குண்டு எறிதல், கேரம், சதுரங்கம், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
விளையாட்டுப் போட்டிகளை மாநகர மேயர் மா.சுப்ரமணியன் 23-ம் தேதி பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் துவக்கி வைக்கிறார். சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.