சென்னை மாநகராட்சி சாலை பராமரிப்பு பணிகளில் தனியார் நிறுவனம் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்
சென்னை மாநகரில் உள்ள சில பேருந்து சாலைகளை சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு சுத்தம் செய்து சில நிபந்தனைகளுடன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு கிரடாய் (CREDAI) சங்கத்துடன் சென்னை மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் அடிப்படையில் இச்சங்கம் சென்னை மாநகரின் 5–வது மண்டலத்திற்கு உள்பட்ட, ஈ.வி.கே சம்பத் சாலை, ஜோதி வெங்கடாச்சலம் சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை, ராஜா முத்தையா சாலை, காந்தி இர்வின் சாலை, போலிஸ் கமிஷனர் ஆபிஸ் சாலை, பாந்தியன் சாலை, வேனல்ஸ் சாலை மற்றும் 7–வது மண்டலத்திற்கு உள்பட்ட புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கங்காதீஸ்வரர் கோயில் தெரு, ராஜா அண்ணாமலை சாலை, நாராயண குரு சாலை ஆகிய சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
இதற்கான தொடக்க விழாவையொட்டி, ஈ.வி.கே.சம்பத் சாலையில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சாலைகளின் பராமரிப்பு பணியினை நேற்று தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர், கூடுதல் கமிஷனர் பிரஜேந்திர நவ்நீத், கிரடாய் சங்கத்தலைவர் சந்தீப் மேத்தா, செயலாளர் சுரேஷ் கிரிஷன், சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் குமரேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.