மாலை மலர் 04.08.2010
சென்னை மாநகராட்சி திட்டம்: ஏ.டி.எம். கார்டு மூலம் சொத்து வரி செலுத்தும் முறை

சென்னை, ஆக. 4- சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்துவோர் மண்டல அலுவலகங்களில் தற்போது செலுத்தி வருகிறார்கள். சொத்து வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கும் சென்று அதிகாரிகள் வசூலித்து வருகிறார்கள்.
இனி ஸ்டேட் பாங்கியில் ஏ.டி.எம். கார்டு மூலம் சொத்துவரி செலுத்தும் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இது தொடர்பாக ஸ்டேட் பாங்கியின் உயர் அதிகாரிகள் சமீபத்தில் மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது இந்த புதிய திட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது.
இதற்காக ஏ.டி.எம். எந்திரத்தில் தனியாக ஒருவசதி ஏற்படுத்தப்படும். சொத்துவரி செலுத்துவோர் அதை அழுத்தியதும் மண்டல அலுவலக எண், வார்டு நம்பர், பில் நம்பர், துணை நம்பர் திரையில் தோன்றும் அதன் பிறகு நாம் ஏ.டி.எம். கார்டை சொருகியதும் நமது கணக்கில் இருக்கும் பணம் சொத்து வரி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.
பின்னர் வரி செலுத்து வோர் அதற்கான பில்லை மாநகராட்சி இணைய தளத்தில் இருந்து டவுன் லோடு செய்து கொள்ளலாம்.
ஸ்டேட்பாங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாது யார் வேண்டுமானாலும் ஸ்டேட்பாங்கி மூலம் சொத்து வரி செலுத்தலாம்.
இதன் மூலம் சென்னை நகரில் வசிப்பவர்களுக்கு சொத்து வரி செலுத்த பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆண்டே இந்த புதிய முறை செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.