மாலை மலர் 13.08.2013

சென்னை மாநகராட்சி
கல்வித்துறை சார்பில் 32 மேல்நிலைப்பள்ளிகள், 36 உயர்நிலை பள்ளிகள் ஒரு
உருது மற்றும் தெலுங்கு உயர்நிலைப்பள்ளிகள், 92 நடுநிலைப்பள்ளிகள், 122
தொடக்கப்பள்ளிகள் 30 பாலர்பள்ளிகள் நடத்தப் படுகிறது. இந்த பள்ளிகளில் 4
ஆயிரத்து 41 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
கடந்த 1995 முதல் 2000
ஆண்டு வரை இந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்ததில் முறை கேடு
நடந்துள்ளதாக புகார் எழுந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலி
சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்துள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்
பட்டது.
இதை தொடர்ந்து மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பிட்ட
கால கட்டத்துக்குள் பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களின் சான்றிதழ்கள்
மற்றும் ஆவணங்களை அரசு தேர்வு துறைக்கு மாநகராட்சி அனுப்பி வைத்தது. அந்த
ஆசிரியர்களின் ஆவணங்களை தேர்வுத்துறை ஆய்வு செய்தது.
அதில் 26
ஆசிரியர்கள் பெயர் பட்டியலை குறிப்பிட்டு அவர்களது கல்வி சான்றிதழ் மற்றும்
பணி நியமனம் தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு கடந்த வாரம்
மாநகராட்சிக்கு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புகார்
கூறப்பட்ட 126 இடை நிலை ஆசிரியர்களின் சான்றிதழ்கள் பரிசீலிக்கப்பட்டதில்
இப்போது 26 பேரை மட்டும் தேர்வு துறை சந்தேக வளையத்துக்குள் கொண்டு
வந்துள்ளது. இவர்கள் 26 பேரும் போலி ஆவணங்கள் கொடுத்து பணியில்
சேர்ந்தார்களா? என்பது ஆய்வுக்கு பிறகு தெரியவரும்.
பணி நியமனத்தின்
போது ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படித்ததற்கான சான்றிதழ்களை வழங்கி
இருக்கிறார்கள். ஆனால் அந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அரசு அங்கீகாரம்
இல்லாதவை என்று கூறப்படுகிறது. எனவே அங்கீகாரம் இல்லாத நிறுவனத்தில்
படித்து வாங்கிய சான்றிதழ்கள் போலியானதாகவே கருதப்படும் என்று அதிகாரி
ஒருவர் கூறினார்.
மூன்று முதல் 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர்கள் பதவி
உயர்வு பெறும் போது அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்துதான் பதவி உயர்வு
வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர
ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.