தினமலர் 08.04.2010
சென்னை மாநகராட்சி விரிவாக்க பணிகள் தீவிரம்
சென்னை : சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்யும், பூர்வாங்க பணிகள் முடியும் நிலையில் உள்ளது.சென்னை புறநகர் பகுதிகளான ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள், 25 ‘ஊராட்சிகளை ஒருங்கிணைத்து சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விரிவாக்கத்திற்கு அமைக்கப் பட்டுள்ள அதிகாரிகள் குழுவினர் பல நிலைகளில் ஊராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத் தினர்.மத்திய அரசு மூலம் கிடைக்க பெற்ற, சென்னை மாநகரின் செயற்கைகோள் வரைபடத்தை வைத்து, வார்டுகள் பிரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சி வார்டுகளில் சாதாரணமாக மக்கள் தொகை 40 ஆயிரம் வரை இருக்கும் வகையில் வார்டுகள் பிரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநகராட்சியில் தற்போதுள்ள 155 வார்டுகளில் ஏறத்தாழ 50 வார்டுகள் குறைய வாய்ப்புள்ளதாகவும், பழைய சென்னை மாநகராட்சியில் 105 முதல் 110 வார்டுகள் இருக்கும்படி வார்டுகள் பிரிக்கப்பட உள்ளது.புதிதாக இணைக்கப்படும் பகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு வார்டுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் மக்கள் தொகை இருக்கும் வகையில் வார்டுகள் பிரிக்கப் பட உள்ளது.அதன்படி, புதிதாக இணையும் பகுதிகளில் 70 முதல் 75 வார்டுகள் உருவாக்கப் பட்டு விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் மொத்தம் 175 முதல் 180 வார்டுகள் இருக்கும் வகையில் பிரிக்கப்பட உள்ளது.இந்த பணிக்கு அனைத்து விதமான குறிப்புகளும் தயார் செய்து வைத்திருப்பதாகவும் எந்தெந்த வார்டுகளை எந்த வார்டில் இணைப்பது, புறநகர் பகுதிகளில் புதிய வார்டுகளை உருவாக்குவது போன்ற பணிகளை உயர்நிலை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.விரிவாக்கப்படும் சென்னை மாநகராட்சியில் 18 மண்டலங்கள் அமைக்கப் படும்.
தற்போது இருக்கும் சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளும் நகரில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்குள் அடங்கி உள்ளது.ஆனால், விரிவாக்கப்படும் சென்னை மாநகராட்சியில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஒரு சில சட்டசபை தொகுதிகளின் சில வார்டுகள் மட்டும் மாநகராட்சியின் எல்லைக்குள் வரும் நிலை உள்ளது.அடுத்து சட்டசபை தொகுதிகள் மாற்றி அமைக்கும் போது மாநகராட்சி எல்லைக்குள் குறிப்பிட்ட சட்டசபை தொகுதிகள் இடம் பெறுவது போல் மாற்றி அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போதைய சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 174 சதுர கிலோ மீட்டர் விரிவாக்கப்படும்.சென்னை மாநகராட்சியின் பரப்பளவு, 426 சதுர கிலோ மீட்டர் தற்போதைய மாநகராட்சியின், மக்கள் தொகை 43 லட்சத்து 43 ஆயிரத்து 645 (2001 கணக் கெடுப்புப்படி). விரிவாக்கப்படும் சென்னை மாநகராட்சியின் மக்கள் தொகை 65 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.