தினமலர் 30.06.2010
சென்னை மேயருக்கு தமிழ் சங்கம் கோரிக்கை
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை தமிழ் சங்கத்தின் சார்பில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் சென்னை நகர மேயர் சுப்பிரமணியத்துக்கு கோரிக்கை மனு அனுப்ப முடிவு செய்தனர். இதன்படி பட்டுக்கோட்டை தமிழ் சங்க தலைவர் மணிமுத்து அனுப்பிய மனு விபரமாவது: கடந்த 22ம் தேதி நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சென்னை மாநகரில் உள்ள 52 முக்கிய சாலைகளுக்கு ஆங்கிலப்பெயர்களை மாற்றி தமிழறிஞர்கள், மொழிப்போர் தியாகிகள் பெயர் சூட்டப்போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் கடந்த 1938ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியன்று ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்து திருச்சி தமிழர் பெரும்படைக்கு தலைமை தாங்கிய பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பெயரை ஒரு சாலைக்கு வைக்க வேண்டும். இவர் பெயரில் முன் ஒரு போக்குவரத்து கழகம் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு சாலைக்கு சினிமா மற்றும் தத்துவார்ந்த பாடல்களில் மக்கள் மனதில் என்றும் நீங்காமல் நிலைத்து நிற்கும் பட்டுக்கோட்டை கவிஞர் கல்யாணசுந்தரம் பெயரை அறிவிக்க வேண்டும். பட்டுக்கோட்டையில் தமிழக அரசின் சார்பில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் பெயர்களை சென்னையில் உள்ள சாலைகளுக்கும் சூட்ட வேண்டும். இவ்வாறு பட்டுக்கோட்டை தமிழ் சங்க தலைவர் மணிமுத்து வேண்டுகோள் விடுத்தார்.