தினமலர் 07.01.2010
செம்மொழி மாநாடு முன்னிட்டு புறநகரிலும் கட்டமைப்பு வசதிகள் : முதல்வரிடம் வேண்டுகோள்
சூலூர்: “உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை புறநகர் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்‘ என தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.சூலூர் பேரூராட்சி தலைவர் பொன்முடி, முதல்வர் கருணாநிதியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த மாநகர வளர்ச்சிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே போல, புறநகர் பகுதிக்கும் வளர்ச்சிக்குழு அமைக்க வேண்டும். திருச்சி ரோடு மற்றும் அவினாசி ரோட்டை இணைக்கும் சாலையை அகலப்படுத்த வேண்டும். சூலூர், திருச்சி ரோட்டிலிருந்து கலங்கல் வழியாக பல்லடம் – பொள்ளாச்சி ரோட்டை இணைக்கும் ரோடு மற்றும் அன்னூர் – காமநாயக்கன்பாளையம் ரோட்டை இணைக்கும் செங்கத்துறை வழியாக உள்ள ரோடு ஆகியவற்றை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும்.கோவை மாவட்டத்தில் ஏழு பேரூராட்சிகளுக்கு சிறிய மற்றும் நடுத்தர பேரூராட்சிகள் மேம்பாடு திட்டத்தில், பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 16 பேரூராட்சிகளில் ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்பு திட்டத்தில் 81.47 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மானியம் போக மீதமுள்ள 30 சதவீத தொகையை “டுபிட்கோ‘ மூலம் கடன் பெற்று பேரூராட்சிகள் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மொழி மாநாட்டை முன்னிட்டு இந்த 30 சதவீத நிதியையும் அரசு மானியமாக பேரூராட்சிகளுக்கு வழங்க வேண்டும்இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது