தினமலர் 14.12.2010
சேலத்தில் ஆட்களைக் கொண்டு செப்டிக் டேங் சுத்தம் செய்ய தடை கலெக்டர் உத்தரவு
சேலம்: “”சேலம் மாவட்டத்தில் ஹோட்டல், திருமண மண்டபங்களில் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்ய ஆட்களை நியமிக்கக்கூடாது; இயந்திரங்கள் கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். மீறினால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,” என, கலெக்டர் சந்திரகுமார் எச்சரித்தார்.
சேலம் கலெக்டர் சந்திரகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஹோட்டல், திருமண மண்டபங்கள், தனியார் கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் துப்புரவு பணியாளர்களை கொண்டு செப்டிக் டேங்குகள் சுத்தம் செய்யப்படுகிறது. அதனால், விஷவாயு தாக்கி ஊழியர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, தமிழக அரசு கடந்த மாதம் 26ம் தேதி வெளியிட்ட அரசாணையில், செப்டிக் டேங்குகளில் இருந்து ஆட்கள் மூலம் கழிவுகள் வெளியேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து ஹோட்டல், திருமண மண்டபங்கள், கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மீறி ஆட்களைக்கொண்டு செப்டிக் டேங்க் சுத்தம் செய்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. சுத்தம் செய்வதற்குரிய இயந்திரங்கள் வாங்கப்பட்டு விடும்.சேலம் மாவட்டத்தில் மழை சேதங்கள் கணக்கிடப்பட்டு, 65 கோடி ரூபாய் நிதி கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பழுதடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, இடி தாக்கி உயிரிழந்த வாழப்பாடி கோணஞ்செட்டியூரை சேர்ந்த அசோகன் என்பவரது மனைவி கிருஷ்ணவேணியிடம், முதல்வர் நிவாரண உதவித்தொகை ஒரு லட்சம் ரூபாயை கலெக்டர் வழங்கினார்.மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி, மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் சுந்தரேசன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.