தினமலர் 02.02.2010
சேலத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
சேலம்: “கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்‘ என, சேலம் மாநகராட்சி கமிஷனர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பருவமழை காரணமாக, கடலோர பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் ஏற்பட்ட காய்ச்சல், சேலம் மாநகரில் பரவாமல் தடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சேலம் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும், 29ம் தேதி முதல் வரும் 10ம் தேதி வரை, 100 மலேரியா பணியாளர்களை கொண்டு வீடு வீடாக கொசுபுழு மற்றும் கொசு ஒழிப்பு சிறப்புப் பணி மேற்கொள்ளப்படுகின்றன. தினசரி ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வார்டு வீதம் கொசு ஒழிப்புப்பணி நடக்கிறது. சுத்தமான நீர் நிலைகளில் உற்பத்தியாகும் கொசுப் புழுக்களை ஒழிக்க, வீடுவீடாக சென்று கிணறு, தொட்டி, மேல்நிலைத்தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, பிளாஸ்டிக் டேங்க் ஆகிய இடங்களில் அபேட் மருந்து போடப்படுகிறது.
சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் உடைந்த, உபயோகமற்ற பக்கெட், தார் டின், டப்பாக்கள், குடம், உரல், தேங்காய்த்தொட்டி, பானை, பூந்தொட்டி, டயர்களில் தேங்கியிருக்கும் நீர் அகற்றப்படுகிறது. அசுத்தமான நீர்நிலைகளில் உற்பத்தியாகும் கொசுப் புழுக்களை ஒழிக்க, தேங்கியிருக்கும் கழிவு நீர் குட்டைகள், சாக்கடைகள், நிலையான நீர் தேக்கங்களில், மருந்து தெளிக்கப்படுகிறது. முதிர்வடைந்த கொசுக்களை அழிக்க, மாலை 5.30 மணிக்கு மேல் புகை தெளிப்பான் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. வீடுகளுக்கு வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.