சேலம் கடை வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சேலம் சின்னக் கடை வீதி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை இடித்து அகற்றினர்.
சேலம் மாநகராட்சிக்குள்பட்ட சின்னக் கடை வீதி, அக்ரஹாரம் பகுதிகள் எந்த நேரமும் மிகுந்த பரபரப்புடன் காணப்படுபவை. மேலும் இங்கு சாலைகள் குறுகியதாக இருப்பதால் தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகின்றன. இதனால் இந்த பகுதி வழியாக அம்மாப்பேட்டை செல்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் மழைக் காலங்களில் மழை வெள்ளம் வடிந்து ஓடுவதற்கு இந்த பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகள் தடையாக இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் பெரிய அளவிலான வடிகால் அமைப்பு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஏற்கெனவே உள்ள சாக்கடைக் கால்வாயை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியிருப்பவர்கள் அவற்றை அகற்றிக் கொள்ளும்படி ஏற்கெனவே மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் அம்மாப்பேட்டை மண்டல உதவி ஆணையர் அரங்கநாதன், உதவிப் பொறியாளர் தமிழ்ச்செல்வன், சிபிச் சக்கரவர்த்தி உள்ளிட்ட பொறியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணியை புதன்கிழமை தொடங்கினர்.
ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் பட்டை கோயில் பகுதியில் இருந்து கோ-ஆப்டெக்ஸ் வரையிலும் சாலையோரங்களில் கடை உரிமையாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன.
இந்த பணியின்போது மாநகர காவல் உதவி ஆணையர் ரவீந்திரன், நகர ஆய்வாளர் சூரியமூர்த்தி தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த பகுதியில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.