தினமலர் 26.10.2010
சேலம் புதிய குடிநீர் திட்டம் தமிழக அரசு ஒப்புதல்
சென்னை : சேலம் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில், 270 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய குடிநீர் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதலை வழங்கி, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,”சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகள், 20 பேரூராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,345 ஊரகக் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் 270 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முழுவதும் மாநில அரசின் திட்டமாக நிறைவேற்ற நிர்வாக ஒப்புதலை வழங்கி, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மாநகராட்சிக்கு 283 கோடியே ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் ஒரு தனி குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முதல்வர் கருணாநிதியால் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக சேலம் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது‘ என, குறிப்பிடப்பட்டுள்ளது