சேலம் மாநகராட்சி பகுதியில் ஓமியோபதி மருத்துவமனை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் கருத்தரங்கில் மேயர் சவுண்டப்பன் தகவல்
சேலம் மாநகராட்சி பகுதியில் புதியதாக ஓமியோபதி மருத்துவமனை விரைவில் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கருத்தரங்கில் மேயர் சவுண்டப்பன் கூறினார்.
கருத்தரங்கம்
தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் சார்பில் தொற்று நோய்கள் மற்றும் அதற்குண்டான ஓமியோபதி மருத்துவ சிகிச்சை குறித்த கருத்தரங்கம் சேலத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஹனிமன் தலைமை தாங்கினார். மத்திய, மாநில ஓமியோபதி மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் என்.வி.சுகதன் வரவேற்றார்.
இந்த கருத்தரங்கில் சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:–
பொதுவாகவே ஓமியோபதி மருத்துவம் என்பது சிறப்பு வாய்ந்தவையாகும். ஓமியோபதி மருத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஓமியோபதி மருத்துவத்துறைக்கு தமிழக முதல்–அமைச்சர், தனி கவனம் மேற்கொண்டு சலுகைகளை அளித்து வருகிறார்.
புதிய மருத்துவமனை
சேலம் மாநகராட்சியில் புதிய ஓமியோபதி மருத்துவமனை ஆரம்பிக்க திட்டம் தயாரித்து சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அனுமதி கிடைத்தவுடன்
ஓமியோபதி மருத்துவமனை விரைவில் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். போதுமான டாக்டர்களும் நியமிக்கப்படுவார்கள்.
இவ்வாறு மேயர் சவுண்டப்பன் பேசினார்.
இந்த கருத்தரங்கில், மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் டாக்டர் ரவி, ஓமியோபதி கவுன்சில் உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கு ஏற்பாடுகளை டாக்டர்கள் பிரபு, சதீஸ்குமார், வெங்கடேஷ் கோபி ஆகியோர் செய்திருந்தனர்.