தினமலர் 25.05.2010
சேலம் மாநகராட்சி மேயர் பெங்களூரு பயணம்: தனியார் துப்புரவு பணி குறித்து நேரில் ஆய்வு
சேலம்: சேலம் மாநகராட்சியில் 21 வார்டு துப்புரவு பணியை தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, மேயர் ரேகாபிரியதர்ஷினி, துணை மேயர் பன்னீர்செல்வம் ஆகியோர் பெங்களூரு சென்றுள்ளனர். சேலம் மாநகராட்சியில் 1,400 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் மாநகராட்சியின் ஒரு பகுதி துப்புரவு பணி தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சியில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு, ஏழு, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 23, 24, 25, 26, 27, 29, 30, 31, 32, 33 47 ஆகிய 21 வார்டு துப்புரவு பணி சுவச்சதா கார்ப்ரேஷன் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சேலம் மாநகராட்சி–சுவச்சதா கார்ப்ரேஷன் ஒப்பந்தம் ஜூன் மாதம் நிறைவடைகிறது. எனவே, கடந்த இரண்டு வாரத்துக்கு முன் சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் 21 வார்டு துப்புரவு பணிக்காக மீண்டும் டெண்டர் கோரப்பட்டது. பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஒன்பது தனியார் நிறுவனங்கள் டெண்டரில் கலந்து கொண்டது.
இதில், பெங்களூரை சேர்ந்த ரமணாரெட்டி என்ற தனியார் நிறுவனம் வசம் துப்புரவு பணியை ஒப்படைப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். எனவே, சேலம் மாநகராட்சி மேயர் ரேகாபிரியதர்ஷினி, துணை மேயர் பன்னீர்செல்வம், மாநகர நல அலுவலர் பொற்கொடி, மாநகராட்சி உதவி கமிஷனர் நெப்போலியன், செயற்பொறியாளர் வெங்கடேஷ், உதவி செயற்பொறியாளர் ரவி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பெங்களூரு புறப்பட்டு சென்றனர்.
பெங்களூருவில் ரமணா ரெட்டி நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புரவு பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுக்கு பின்னர் துப்புரவு பணி ரமணா ரெட்டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.