தினமலர் 16.08.2010
சைக்கிளுக்கு தனி பாதை: மாநகராட்சி நடவடிக்கை
சென்னை : அண்ணாநகரில் சாலை ஓரத்தில் தனியாக சைக்கிள் பாதை அமைக்க, சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. பள்ளிகள் நிறைந்த, போக்குவரத்து மிகுதியான பகுதிகளில் சைக்கிளில் செல்பவர்கள், பாதிப்பு இல்லாமல் செல்ல வசதியாக, மேலைநாடுகளில் உள்ளதுபோல் சாலைகளில் சைக்கிள் பாதை தனியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பள்ளிகள் அதிகம் உள்ள, போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதியான அண்ணாநகரில் 66 மற்றும் 67வது வார்டுகளில் சைக்கிள் பாதை அமைப்பது தொடர்பாக, மாநகராட்சி கலந்தாளுனர்களை நியமித்துள்ளது. கலந்தாளுனர் குழு, அண்ணாநகரில் உள்ள பள்ளிகள் விவரம், எவ்வளவு மாணவர்கள் சைக்கிள் பயன்படுத்துகின்றனர். வாகன போக்குவரத்து விவரம், சாலை வசதி மற்றும் வாகனங்கள் செல்லும்விதம் குறித்து ஆய்வு செய்துள்ளனர். கலந்தாளுனர் குழுவினர் ஆய்வு செய்த விவரங்களை, மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி முன்னிலையில் அதிகாரிகளுக்கு விளக்கினர். அக்டோபர் இறுதிக்குள் கலந்தாளுனர் குழுவினரின் இறுதி அறிக்கை மாநகராட்சியிடம் தரப்படும்.
சைக்கிள் செல்லும் பாதையில் மற்ற வாகனங்கள் செல்லாமல் தடுப்பது, சைக்கிள் பாதையில் ஆக்கிரமிப்பு இல்லாமல் செய்வது, பாதசாரிகளால் சைக்கிள் ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சாலை சந்திப்பு பகுதிகளில் சைக்கிள் பாதை எவ்வாறு அமைக்கப்படும் என்பதை விளக்கினர். சிக்னல்களிலும், சாலை சந்திப்புகளிலும் சைக்கிள்கள் முன்னதாக வந்து, நிறுத்து கோடு அருகே நிற்க வைத்து, சிக்னல் கிடைத்ததும் முதலில் சைக்கிள்கள் செல்ல அனுமதிக்கப்படும். கலந்தாளுனர்களின் இறுதி அறிக்கை பெற்ற பின் அண்ணாநகரில் சைக்கிள் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கமிஷனர் ராஜேஷ் லக்கானி கூறினார்.