தினமலர் 31.03.2010
சொத்துவரி விதிப்பில் மாற்றம்: வரி வசூலிப்போர் வலியுறுத்தல்
மதுரை:மதுரை மாநகராட்சியில் புதிய கட்டங்களுக்கு சொத்துவரி விதித்தல் மற்றும் அடிப்படை மதிப்பை, தெருக்களில் தரத்திற்கு ஏற்ப மாற்றுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென, மதுரை மாநகராட்சி வரி வசூலிப்போர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மதுரையில் 2008 ஏப்ரல் முதல் பொதுவரி சீராய்வு அமல்படுத்தப்பட்டது. அதன் பின் கட்டப்பட்ட கட்டங்களுக்கு வரிவிதிப்பிற்கு, மாநகராட்சியில் உள்ள தெருக்கள் ஏ, பி,சி, டி., என தரம் பிரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வரிவிதிப்பு செய்யப்படுகிறது. ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த வரியை விட இது, 400 சதவீதம் அதிகமாக உள்ளது.
இதனால் வரி செலுத்துவோர் பாதிப்படைந் துள்ளனர். அதனால் தெருக்களின் தரம் பிரித்ததில் மாறுதல் செய்ய வேண்டும். மாநகராட்சி மறுபரிசீலனை செய்து, இதனை மாற்றியமைக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என சங்க தலைவர் யாகூப்கான், பொது செயலாளர் சையது மைதீன் தெரிவித்துள்ளனர்.