தினகரன் 26.05.2010
ஜூனில் தொடங்கும் பருவமழையை சமாளிக்க மாநகராட்சி தயாராகிறதா?
பெங்களூர், மே 26: பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் வடிகால் கால்வாய்களை தூர்வாறி சுத்தப்படுத்தும் பணியில் பெங்க ளூர் மாநகராட்சி ஈடுபடுமா என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடந்த ஆண்டு மழையின் போது லிங்கராஜபுரத்தை சேர்ந்த அபிஷேக் பிரகாஷ் என்ற 6 வயது சிறுவன் நிரம்பிவழிந்த மழைநீர் வடிகால் கால்வாயில் அடித்து செல்லப்பட்டான். இதே போன்று 8 மாதங்களுக்கு முன்பு ஒன்றரை வயது குழந்தை விஜய் மடிவாளா ஏரி அருகே வடிகால் கால்வாயில் விழுந்து உயிரிழந்தான்.
சமீபத்தில் வெளுத்துவாங்கிய கோடை மழையின் போது, சாலைகளில் பல மணி நேரம் மழை நீர் தேங்கி கிடந்ததோடு, மரங்கள் சாய்ந்து டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து, மின்கம்பங்கள் கவிழ்ந்து மாநகரத்தின் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதன் மூலம் வடிகால் கால்வாய்கள் இன்னும் மோசமான நிலையிலேயே உள்ளன என்ற உண்மை வெளியானது.
பருவ மழையை சந்திக்க தயாராகிவிட்டோம் என்று மாநகராட்சி கூறிக்கொண்டாலும், வெங்கடப்பா லே அவுட்டில் கோடைமழையால் நிரம்பிவழிந்த திறந்தவெளி மழைநீர் கால்வாயில் மூழ்கி ராமகிருஷ்ணா(48) என்பவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, மாநகராட்சி தனது கடமையை புறக்கணித்துள்ளது என்பது மட்டுமின்றி ஒழுங்கின்மை நடத்தையையும் கர்நாடக உயர் நீதிமன்றம் கண்டித்தது. பெங்களூர் நகரின் தாழ்வான பகுதிகளான ஈஜிபுரா, ஆடுகோடி, டிஜே ஹள்ளி ஆகிய இடங்கள், பெரும் மழை அடித்தால் வெள்ளக்காடாக மாறும் நிலையில் உள்ளன. இதை அந்தந்தப்பகுதி கவுன்சிலர்கள் வலியுறுத்தி பணிகளை துரிதப் படுத்த வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.
பருவகால முன்னெச்சரிக்கை திட்டத்தை சமீபத்தில் அறிவித்த மாநகர மேயர் நடராஜ், 150 வெள்ளப்பதட்ட பகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம்.
போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள 8 மண்டலங்களில் அவசரக்குழுக்கள் அமைக்கப்படும். இவைகளை நிறைவேற்ற நிதி பற்றாக்குறை இல்லை. ஆரம்ப மற்றும் செகண்டரி மழைநீர் கால்வாய்களில் தூர்வாறும் பணிகள் நகர் முழுவதும் நடந்து வருகிறது. 842 கி.மீ. தூர வெள்ளநீர் கால்வாயில் 50% தூர்வாறப்பட்டுவிட்டது. சில கால்வாய்கள் மீது தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் பருவகாலத்திற்கு முன்பு நிறைவடையும்.
மழைநீர் கால்வாய்களில் திடக்கழிவுகளை கொட்டுவதால் அடைப்பு ஏற்படுகிறது. மழைநீர் ஒரு இடத்தில் தேங்காமல் அடைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்