தினமணி 17.09.2010
ஜெர்மானியத் தொழில்நுட்பத்தை பின்பற்றுகிறது கோவை மாநகராட்சி!
கோவை, செப். 16: திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம் ஆகியவற்றில் ஜெர்மானியத் தொழில்நுட்பத்தை பின்பற்ற கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஜெர்மனியின் எஸ்லிங்கன் ஆம் நெக்கர் மாநகருக்கு சுற்றுப்பயணம் சென்று வந்த கோவை மேயர் ஆர். வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத், மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா இத் தகவலைத் தெரிவித்தனர்.
எஸ்லிங்கன் ஆம் நெக்கர் மாநகர மேயரின் அழைப்பின்பேரில், கோவை மேயர் தலைமையிலான குழு செப்.8 முதல் 14 ஆம் தேதி வரை ஜெர்மனிக்கு அரசுமுறை பயணமாக சென்று வந்தது. இப்பயணம் தொடர்பாகவும், அதையொட்டி மேற்கொள்ள இருக்கும்
நடவடிக்கைகள் குறித்தும் மேயர் வெங்கடாசலம், ஆட்சியர் உமாநாத், ஆணையர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
எஸ்லிங்கன் ஆம் நெக்கர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம் ஆகிய திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன. ஆண்டுக்கு 4.50 லட்சம் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறது. குடிநீர் வீணாவது 7.7 சதவீதம் மட்டுமே. மாநகராட்சியின் திட்டங்களில் மக்களின் ஒத்துழைப்பு முழு அளவில் இருக்கிறது என்றார் மேயர் வெங்கடாசலம்.
“கோவை மாநகராட்சியின் மக்கள் தொகையில் 25 சதம் மட்டுமே எஸ்லிங்கன் ஆம் நெக்கர் மாநகரின் மக்கள் தொகையாக உள்ளது. இருப்பினும் கோவை மாநகராட்சியைக் காட்டிலும் அதிக திட்டங்கள், சேவைகள் அங்கு தரப்படுகிறது’ என்றார் மாவட்ட ஆட்சியர் உமாநாத்.
அவர் மேலும் கூறியது:
கோவை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், முன்னோடித் திட்டமாக இருக்கிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாநகராட்சியிகள் கோவைக்கு வந்து இத் திட்டத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றன.
ஆனால், எஸ்லிங்கன் ஆம் நெக்கர் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் இதற்கும் மேம்பட்ட தொழில்நுட்பமாக உள்ளது. குளிர் சீதோஷ்ண நிலை உள்ள பகுதி என்பதால், வீடுகளில் வெப்பச் சூழல் தேவைப்படுகிறது. இதில் 30 சதவீதம் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் எரிசக்தியின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
குழாய் உடைப்பு, குடிநீர் இழப்பு ஆகியவற்றைக் குறைக்க உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பங்களை கோவை மாநகராட்சிக்கும் வழங்க அம் மாநகராட்சி ஒப்புதல் கொடுத்துள்ளது. அதோடு, இங்குள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உதவிகள் செய்யவும், பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் முன்வந்துள்ளது.
அங்குள்ள திட்டங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை அம் மாநகராட்சியின் உதவியோடு கோவை மாநகராட்சியிலும் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு மாநகராட்சி மன்றம் மற்றும் மத்திய மாநில அரசுகளின் அனுமதியைப் பெற்று இரு மாநகராட்சிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் குப்பைகளைத் தரம் பிரிக்க 5 வகையான குப்பைப் பெட்டிகள் வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இத் திட்டத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் இருக்கிறது. திடக்கழிவு மேலாண்மை,
குடிநீர் விநியோகம், நீர்நிலைகள் புனரமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் ஜெர்மனியின் எஸ்லிங்கன் ஆம் நெக்கர் மாநகராட்சியின் தொழில்நுட்பத்தைப் பின்பற்றத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.